ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இரத்த சோகை தீர்க்கும் தானிய  கீரை   

                                                                              சின்னுசாமி பிரபாகரன்
            

மனிதர்கள் வாழ்க்கைமுறை மாற்றத்தால் சத்தான உணவு சரியான நேரத்தில் சரியான அளவு உட்கொள்வது இல்லை. சத்து பற்றாகுறை  ஏற்பட்டு  பல  நோய்களுக்கு  ஏதுவாக அமைகிறது . அதில் முக்கியமானது  இரத்தசோகை  மற்றும் சுண்ணாம்பு  சத்து  குறைபாடாகும் சத்தான உணவு சரியான நேரத்தில் சரியான  அளவு  இல்லாவிட்டால்  உயிர் போகும் 
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் குழந்தை பெறும் வயதுள்ள பெண்களுக்கு ரத்த சோகை அதிகரித்துள்ளதையே தரவுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்திருந்தாலும், அதில் கவலைப்பட வேண்டிய ஒரு தகவலும் உள்ளது.

குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை குறைபாடு குழந்தைப் பருவத்திலேயே சரி செய்யப்படாவிட்டால், அதுவே ஒரு நச்சுச் சுழல் ஆகிவிடும் என்கிறார் மருத்துவர் ரம்யா.

ஒரு பெண் குழந்தைக்கு ரத்த சோகை இருப்பது குழந்தைப் பருவத்திலேயே சரி செய்யப்படாவிட்டால், அது பூப்படைந்த பின்னரும் தொடர வாய்ப்புண்டு. அதன்பின் மாதவிடாயின்போது மேலும் ரத்த இழப்பு ஏற்பட்டு, அக்குழந்தை வளர்ந்த பெண் ஆனபின்னும் ரத்த சோகையுடன் இருக்கக்கூடும். அப்பெண் திருமணமாகி கருவுற்றால் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ரத்த சோகை இருக்கும் என்கிறார் அவர்.

ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறைப் பிரசவம், மகப்பேறின்போது அதீத ரத்தப் போக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்தல், குழந்தையின் எடை குறைதல், மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல், பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலக் கோளாறுகள் உண்டாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம் எனவும் அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

ரத்த சோகை எதனால் உண்டாகிறது? தடுக்க என்ன வழி?

இரும்புச் சத்து பற்றாக்குறையால் பெரும்பாலும் ரத்த சோகை உண்டாகிறது. ஃபோலேட் (விட்டமின் - பி9), விட்டமின் - பி12, விட்டமின் - ஏ குறைபாடு ஆகியவையும் ரத்த சோகை உண்டாக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.

மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி, ஒட்டுன்னிகளால் உண்டாகும் நோய்கள், மரபணு ரீதியாக வரும் ஹீமோகுளோபின் நோய்கள் (haemoglobinopathies) ஆகியவையும் ரத்த சோகையை உண்டாக்கும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக நிலவும் வறுமையால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு, சமூக - பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள்கூட சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு (balanced-deit) உட்கொள்ளாதது ஆகியவை ரத்த சோகை ஏற்பட வழிவகுக்கிறது என்கிறார் ரம்யா.

'அனீமியா முக்த் பாரத்' (ரத்த சோகை இல்லாத இந்தியா) போன்ற திட்டங்கள் மூலம் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை வழங்குதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடல் புழு நீக்கம் செய்தல், விழிப்புணர்வு பிரசாரங்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டாலும் குழந்தைப் பருவம் முதலே ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ரம்யா.

அனைத்து ஊட்டச்சத்துகளும் நிரம்பிய, குறிப்பாக இரும்புச்சத்து மிக்க, சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றினால் ரத்த சோகையைத் தவிர்க்க முடியும் என்கிறார் அவர்.

நுண்-ஊட்டச்சத்துகள் (micro-nutrients) உணவில் சேர்க்கப்படுவது மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், விட்டமின்கள் மற்றும் தாதுக்களை மாத்திரை வடிவில் உட்கொள்வது ஆகியவற்றை பரிந்துரைக்கும் உலக சுகாதா அமைப்பு, நோய்க் கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு, மகப்பேறு சார்ந்த உடல்நலனைப் பராமரித்தல் ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என்கிறது.

இதுமட்டுமல்லாமல் வறுமை, விழிப்புணர்வின்மை, பாலின பாகுபாடு போன்ற அடிப்படை காரணிகளையும் சரிசெய்வதே பெண்களை அதிக அளவில் பாதிக்கும் ரத்த சோகையை அழிக்கும் வழி என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற விட்டமின் - சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும். இரும்புச் சத்துக்காக நாம் உட்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து நாம் எதை உண்கிறோம் என்பது குறித்தும் அறிந்து வைத்திருப்பது முக்கியம்; ஏனெனில் சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும், வேறு சில உணவுகள் தடுக்கும்

நன்றி:BBC